புகலிடம் மற்றும் அரசியல் தஞ்சம் கோரி, 1670 வெளிநாட்டு புகலிடக்கோரிக்கையாளர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாக, ஐ.நாவின் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த மார்ச் 31ஆம் திகதி வரை இலங்கையில் புகலிடம், அரசியல் தஞ்சம் கோரி வந்த 851 பேரும், அரசியல் தஞ்சம் கோரி 819 பேர் இலங்கையில் தங்கியிருப்பதாகவும், ஐ.நாவின் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வாறு புகலிடக் கோரியவர்களுள் பாகிஸ்தானைச் சேர்ந்தோரே அதிகம் என்றும், சுமார் 608 பாகிஸ்தானியர்கள் இலங்கையில் தங்கியிருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தவிர ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 146 பேரும், மியன்மார்- 34, ஈரான்- 22, சிரியா- 14, யேமன்- 13, பாலஸ்தீனம்- 9, சோமாலியா, மாலைத்தீவு, டியுனீசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இலங்கையில் புகலிடக் கோரிக்கையாளர்களாக தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.