ஈரான் அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தின் ஊடாக ஊவா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பட்டப்படிப்புக்கும் அதன் செயற்பாடுகளுக்கும் ஊவாவில் தடை விதிக்குமாறு கோரி ஊவா மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் செந்தில் தொண்டமானால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு, ஊவா மாகாண சபையில், ஏகமனதாக அங்கிகாரம் கிடைத்துள்ளது.

அந்த பட்டப்படிப்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்பதனால் அதனை தடைசெய்யுமாறும், இரகசிய பொலிஸாரினால் விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்றும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பாடத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச சொத்துக்களை வழங்கிய, ஊவா மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகள் நான்கின் அதிபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அந்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் அல்-முஸ்தபா பல்கலைக்கழகத்தின் பட்டத்துக்கு இலங்கையில் அங்கீகாரமில்லை என்றும் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ, அரசாங்க சேவை ஆணைக்குழு, உயர்கல்வி அமைச்சோ அங்கிகாரமளிக்கவில்லை என்றும் செந்தில் தொண்டமான், ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார்.

ஊவா மாகாண சபையின் மாதாந்த கூட்டம் அதன் தலைவர் ஏ.எம்.புத்ததாஸ தலைமையில் நேற்று கூடியது. இதன்போதே, மேற்கண்ட யோசனை சமர்ப்பிக்கப்பட்டு, சகல உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.