இலங்கையில் தமிழ் மக்களின் வேதனையை போக்குவதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் கனடா வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்து 10 வருட பூர்த்தியை முன்னிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பாரிய இழப்புக்களை தமிழ் மக்கள் எதிர்கொண்டதுடன், மேலும் பலர் காணாமலும் இடம்பெயர்ந்தும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 10 வருட காலப்பகுதியினில், கனேடிய தமிழர்கள் பலரை நேரடியாக சந்தித்து அவர்களின் துன்பியலான அனுபவத்தை கேட்டு மிகவும் மனம் வருந்தியதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ஆறாத துயர்வடுவினை தாங்கியுள்ள தமிழ் மக்களின் வேதனையை மட்டுப்படுத்துவதற்கு ஏற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என இந்த தருணத்தில் வேண்டிக்கொள்கிறேன்.

குறிப்பாக ஆக்கபூர்வமான பொறுப்பு கூறல் மற்றும் வேற்றுமையினை கலைந்து மக்களை சமரசப்படுத்தி நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கு ஆக்கபூர்வமான செயல்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தமிழ் மக்கள் பாதகமான செயல்பாடுகளை எதிர்நோக்கியுள்ள போதிலும், கனடாவாழ் தமிழ் மக்கள், கனேடிய மக்களுக்கும் கனடாவிற்கும் அளப்பரிய சேவைகளை செய்து வருவதனை தாம் நன்கு உணர்த்துள்ளதாகவும் கனேடிய பிரதமரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.