இலங்கையில், குற்றத்தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையே அண்மைக்கால வன்முறைகளுக்கான காரணம் என்று சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதும், அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நாட்டில் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமை கவலையளிக்கிறது.சர்வதேச சட்டங்கள், மனித உரிமைகள் சட்டங்கள் என்பனவற்றை மீறியும், துஸ்பிரயோகங்கள் ஊடாக குற்றங்களைப் புரிந்தவர்கள் பொறுப்புக்கூறல்மூலம் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறல்லாது குற்றவாளிகள் தண்டனைகளில் தப்பும் வசதி இலங்கையில் நீடிப்பதனால் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணம் இருப்பதாக, சர்வதேச மன்னிப்பு சபையின் தென்னாசிய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.