உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. கடந்த மாதம் 21ம் திகதி காலை, இலங்கையில் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் 3 விருந்தகங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் சுமார் 257 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரியான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹஷீமின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேர் நேற்றைய தினம் கல்முனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட பிரதான அமைப்பாளர் கல்முனை சியாம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கல்முனை சியாம் என்பவரே, கடந்த 26ம் திகதி சாய்ந்தமருது வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு, சஹ்ரானின் தந்தை உள்ளிட்டவர்களை அழைத்து செல்ல உதவி புரிந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் பயிற்சிகளையும் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் வகையில் குருநாகல் – அலகொலதெனிய பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட முகாம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதியில் உள்ள தென்னை மரங்கள் நாட்டப்பட்ட காணி ஒன்றை பயிற்சி முகாமாக பயன்படுத்தி வந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் முன்னதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பெறப்பட்ட தகவல்களுக்கமைய நாடாளுமன்ற மொழிப்பெயர்ப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.