முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் திகதிமுதல் ஜூன் 02ம் திகதிவரை வைத்திய தேவைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார். எனவே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அரச தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு தெரிவிக்காததன் அடிப்படையில் குறித்த காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் வழக்கை ஜூன் 19ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் அன்றைய தினம் சாட்சியாளர்கள் நால்வரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.