பொதுபலசேனாவின் பௌத்தமதகுரு ஞானசாரதேரரிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதன் காரணமாக ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் குடும்பத்தவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஊடகவியலாளரின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளமையால் எனது குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு பாரதூரமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், உரிய பாதுகாப்பை வழங்குமாறும் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார். ஞானசார தேரர் சிறையிலிருக்கும்போதே அவரது ஆதரவாளர்கள் என்னை தூற்றி வந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஞானசாரர் விடுதலையான பின்னரும் சமூக ஊடகங்களில் இது தொடர்வதாக குறிப்பிட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள் சட்டத்தை கையிலெடுக்க தயங்கமாட்டார்கள் என தெரிவித்துள்ள சந்தியா, வரலாற்றில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.