கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வைத்தியர் 42 வயதுடைய சேகு ஷியாப்தீன் மொஹமட் ஷாபி எனவும் குறித்த வைத்தியர் குருணாகல் வைத்தியசாலையில் கடமையாற்றுபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்திற்குரிய முறையில் வருமானம் ஈட்டியமை தொடர்பிலேயே குறித்த வைத்தியர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிங்கள பௌத்த பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த வைத்தியர் குறித்த தகவல் கிடைத்ததா? இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதா என சபையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினர். இந்த குற்றச்சாட்டு குறித்து விசேட விசாரணை ஒன்றினை நடத்த குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்றையதினம் சபாநாயகர் சபையில் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து விசேட விசாரணை ஒன்றினை நடத்த குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சபை நகர்வுகளின் போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, முஸ்லிம் வைத்தியர் ஒருவர் சிங்கள பெண்களுக்கு கருக்கலைப்பு சத்திரசிகிச்சை செய்ததாக சிங்கள ஊடகம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, இது குறித்த உண்மைத்தன்மை என்ன? என கேள்வி எழுப்பினர்,

இதற்கு பதில் தெரிவித்த சபாநாயகர் :- இது குறித்து இன்று (நேற்று) காலையிலும் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசியில் வினவினேன். இது குறித்து கடினமான விசேட விசாரணை ஒன்றினை நடத்தக் கோரியுள்ளேன் என்றார்.

இந்நிலையில், நான்காயிரம் சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ததாக கூறும் தவ்ஹித் ஜமா-அத்தை சேர்ந்த அந்த முஸ்லிம் வைத்தியர் யார்? இந்த செய்தி உண்மையா? உண்மையென்றால் உடனடியாக பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றினை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக கடந்த வியதழக்கிழமை சபையில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய உடனடியாக உண்மைகளை கண்டறிந்து சபையில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.

முதன்மை சிங்கள நாளிதழ் ஒன்றில் இன்றைய தினம் (வியாழக்கிழமை 23.05.2019) தலைப்புச் செய்தியாக பிரசுரிக்கப்பட்ட செய்தி ஒன்று குறித்து இன்றைய தினம் வியாழக்கிழமை கூடிய பாராளுமன்ற அமர்வுகளின் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கேள்வி எழுப்பினார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக:- சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளிவந்துள்ள செய்தியொன்று குறித்து நான் கேள்வி எழுப்ப விரும்புகின்றேன். இதில் சத்திர சிகிச்சை செய்யும் தவ்ஹித் ஜமா-அத் அமைப்பை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஒருவர் 4 ஆயிரம் சிங்கள பெண்களுக்கு கருத்தடை செய்துள்ளார்.

இது குறித்து சாட்சியங்களுடன் தகவல் வெளிவந்துள்ளது. குறித்த வைத்தியரை கைதுசெய்ய தீவிர விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது என குறித்த பத்திரிகை செய்தியை தலைப்புச்செய்தியாக பிரசுரித்துள்ளது. இந்த செய்தி உண்மையென்றால் இது மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் காரணியாக அமையும். இதனால் ஏனைய இன மக்கள் முஸ்லிம் வைத்தியர்கள் எவரிடமும் செல்லாது தவிர்க்க வாய்ப்புகள் உள்ளது.

அதையும் தாண்டி இது இனவாத பிரச்சினைகளை உருவாக்கும் காரணியாக அமையும். ஆகவே இந்த செய்தி குறித்து அரசாங்கம் உடனடியாக உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். குறித்த வைத்தியர் 7 ஆயிரம் சத்திர சிகிச்சைகளை செய்துள்ளார் எனவும் அதில் நான்காயிரம் சிகிச்சைகளில் பௌத்த சிங்கள பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்துள்ளார் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே அரசாங்கம் என்ற வகையில் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றதா என்பதையும் கூற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த வைத்தியர் நேற்றையதினம் சந்தேகத்திற்குரிய சொத்துகள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. (நன்றி  http://www.virakesari.lk/)