கைதுசெய்யப்பட்டுள்ள குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷியாப்தீன் ஷாபிக்கு எதிராக, இன்று 16 தாய்மார் முறைபாடு செய்ததாக, குருநாகல் போதனா வைத்தியசாலையின் நிறைவேற்றதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குருநாகல், வாரியபொல, கலேவல, தம்புளை, மாவத்தகம, மெல்சிறிபுர ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே முறைபாடு செய்துள்ளனர். இதேவேளை நேற்று வாரியபொல, குருநாகல் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு தாய்மார் குறித்த வைத்தியருக்கு எதிராக முறைபாடு செய்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.இதேவேளை குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியருக்கு எதிராக, வடமேல் மாகாண சபையின் முன்னாள் கல்வியமைச்சர் சந்திய குமார ராஜபக்ஸ முறைப்பாடு செய்யவுள்ளதாக கூறியுள்ளார். சந்தேகத்துக்கிடமான முறையில் சொத்து சேகரித்துள்ளமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த வைத்தியர், பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அரசாங்கப் பதவியிலிருந்து விலகியபோதும், சட்டவிரோத நடவடிக்கை மூலம் மீண்டும் அவர் அப்பதவியைப் பெற்றுள்ளமைக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைபாடு செய்யவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.