கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை மருத்துவமனை மருத்துவர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்கு சுகாதார அமைச்சு விசேட குழு ஒன்றை நியமிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா மருத்துவமனையின் குறித்த மருத்துவருக்கு எதிராக இன்று மாத்திரம் 51 பெண்கள் முறைப்பாடு செய்துள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேகரித்தமை தொடர்பில், சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி கடந்த 24ம் திகதி குருணாகலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின் அவ் மருத்துவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.42 வயதுடைய குறித்த மருத்துவர் 13 வருடங்களுக்கும் அதிக காலம், மகப்பேற்று மற்றும் நரம்பியல் மருத்துவராக கடமையாற்றியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இன்று அவர் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்திருந்த பெண்கள் ஊடகத்திடம் கருத்து தெரிவித்திருந்தனர். 2010 ஓகஸ்ட் 29ஆம் திகதி குறித்த மருத்துவரிடம் மகப்பேற்று சத்திரசிகிச்சை செய்துகொண்டதாக தெரிவித்த பெண் ஒருவர், அதன் பின்னர் தனக்கு குழந்தைபேறு கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பார்வை குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்.

இதேநேரம், மற்றுமொரு பெண் கருத்து தெரிவிக்கையில், 2011 நவம்பர் மாதம் 3ஆம் திகதி குறித்த மருத்துவரிடம் முதலாவது குழந்தைப்பேறுக்காக சத்திரசிகிச்சை செய்துகொண்டதாகவும், தற்போது 8 வருடங்கள் கடந்தும் தனக்கு இதுவரையில் வேறு குழந்தைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதன்போது கருத்து தெரிவித்துள்ள மற்றுமொரு பெண், 2012 ஜுலை மாதம் 7 ஆம் திகதி குறித்த மருத்துவரிடம் தான் மகப்பேற்று சத்திரசிகிச்சை செய்துகொண்டதாக கூறினார். இதன்போது தனது முதலாவது குழந்தையும் தனக்கு இல்லாது போனதாக குறிப்பிட்டுள்ள அவர், இன்றுவரை தனக்கு வேறு குழந்தை பேறுகளும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட மருத்துவர் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரும் இன்று கருத்து தெரிவித்திருந்தனர். குறித்த மருத்துவர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை நிறுத்துமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குருநாகலை மருத்துவமனை பணிப்பாளருக்கு அழுத்தம் கொடுப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ன், குறித்த மருத்துவர் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய தனியான விசாரணை குழுவொன்று அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட மருத்துவர் மேற்கொண்ட சத்திரசிகிச்சைகள் தொடர்பில் முதலில் 4000 என்றும் பின்னர் 8000 என்றும் தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் அவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், நாட்டின் சட்டத்துக்கு அமைய அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த மருத்துவர் தொடர்பான விசாரணையை நிறுத்துமாறு அழுத்தம் கொடுப்பதாக வெளியாகும் தகவல் குறித்தும் ஊடகவியலாளர்கள் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போது பதிலளித்துள்ள அவர், தான் அவ்வாறு எந்தவொரு அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.