மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியாவின் பிரதமராக, இரண்டாவது முறையாக, நரேந்திர மோடி, எதிர்வரும் 30ம் தேதி பதவியேற்கவுள்ளார்.

இந்த விழாவுக்காக, குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னாள் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்குப் பிறகு, தனிப்பெரும்பான்மையுடன் 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவுசெய்து தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கும் தலைவர்களின் வரிசையில் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். 542 மக்களவைத் தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜக மட்டும் 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம், தில்லியில் நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஜக கூட்டணியின் தலைவராகவும், பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழுவின் தலைவராகவும் நரேந்திர மோடி ஏகமனதாக தெரிவானார்.