ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிப்புரியும் வைத்தியரொருவரை, அவர் அணிந்துவந்திருந்த புர்காவை கழற்றும்படி பணித்தமையின் காரணமாக, தனது வைத்தியர் தொழிலை இராஜினாமா செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் குறித்த வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில், குறித்த வைத்திய அதிகாரி புர்கா அணிந்திருந்தமையின் காரணமாக, நோயாளரொருவர் அவரிடம் மருத்துவம் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையிலிருந்து புர்காவை கழற்றிவிட்டு பணிக்கு வரும்படி வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியால் பணிப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்த வைத்தியர், மே மாதம் 2ஆம் திகதி வரையில் வைத்தியசாலைக்கு வருகைதராதிருந்த நிலையில், அன்றைய தினம் வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரிக்கு அலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு தனக்கு சுகயீனம் என்று அறிவித்துள்ளார்.

பின்னர் குறித்த வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியான ஜே. ஹெட்டியாராச்சி இதுபற்றி விளக்கமளிக்கையில், இச்சம்பவம் எமது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதோடு, அவர் சில நாள்கள் பணிக்கு வருகைதராதிருந்த நிலையில், தான் பணியியை இராஜினாமா செய்துகொள்வதாக, இராஜினாமா கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளாரென்றும் எனினும் அக்கடிதத்தை தாம் இன்னமும் பொறுப்பேற்றுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.