திருகோணமலை கன்னியா பகுதியில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு கண்டனத்தையும் மனவேதனையும் இந்துக்குரமார் அமைப்பு வெளியிட்டுள்ளது.

இச்சம்வம் தொடர்பில் குறித்த அமைப்பின் தலைவர் கே.வி.கே.வைத்தீஸ்வரக்குருக்கள் வெளியிட்டள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க’ என்னும் தத்துவத்திற்கு அமைவாக உலகவாழ் மக்கள் அனைவரும் தமது வாழ்வியலை நடத்திவருகின்றார்கள்.எமது இலங்கை திருநாட்டில் இந்துக்களின் வழிபாட்டிடங்கள் சார்ந்து இலங்கை தொல்லியல் திணைக்களம் அண்ணளவாக எழுபதிற்கும் மேற்பட்ட பகுதிகளை அடையாளமிட்டு தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இவை எமது வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சார்ந்த நிலையில் காணப்படுகின்றது. மிக அண்மையில் கிழக்கு திருகோணமலை பகுதியிலுள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுப்பகுதியில் பலவித விரும்பத்தகாத செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகப் புராதனமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்திருந்த விநாயகர் ஆலயம் அப்பகுதியைச் சார்ந்த பௌத்த வழிபாட்டிட துறவி ஒருவரின் தலைமையில் நகர்த்தப்பட்டு அதன் அத்திபாரம் கிளறப்பட்டு அண்மையில் உள்ள கிணற்றில் இடப்பட்டதாக அறிகின்றோம். இந்து மக்கள் கௌதம புத்தபெருமானின் போதனைகளுக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்கள் அல்லர்.அவரின் அத்துவ சிந்தனைகளை ஏற்றுக்கொண்டவர்கள்.

இந்த சூழலில் மேற்குறித்த பகுதியில் நடைபெற்று வருகின்ற செயற்பாடுகள் கௌதம புத்தபகவானின் போதனைகளை மீறுவதாக நாம் கருதுகிறோம். இவ்வாறு வரம்பு மீறி நடைபெறும் செயற்பாடுகளை இலங்கை இந்துக்குருமார் அமைப்பானது மிகவும் வன்மையாக கண்டிப்பதுடன் மனவேதனையையும் பகிர்ந்து கொள்கின்றது.

தொடர்ந்து வரும் காலங்களில் இவ்வாறான சூழல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பிரதேச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் அனைவரினதும் கடமையல்லவா? ஆகவே விரைவில் உரிய சாத்தியமான இந்துமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கின்றார்கள் எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.