பௌத்த பிக்குவால் கணதேவி தேவாலயம் என பெயர்மாற்றப்பட்ட நீராவியடி பிள்ளையார் ஆலய பெயர்ப்பலகை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கட்டளைப்படி மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் குறித்த சர்சைக்குரிய ஆலயம் தொடர்பான வழக்கு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்த்தினரால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்டநீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணைகளின்போது நீதிமன்று இம்மாதம் 6 ஆம் திகதி வழங்கிய தீர்ப்புக்கு அமைவாக கணதேவி தேவாலயம் என எழுதப்பட்டுள்ள பெயரை நீக்கி நீராவியடி பிள்ளையார் ஆலயம் என எழுதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டிருந்தது.

இந்த கட்டளை வழங்கப்பட்டு 20 நாட்களை கடந்துள்ள போதிலும் பொலிஸார் அதனை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் பௌத்த பிக்குவால் பிள்ளையார் ஆலயத்துக்கு மட்டும் புதிதாக இரண்டு CCTV கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் மன்றின் கவனத்துக்கு பிள்ளையார் ஆலய நிர்வாகம் சார்பாக மன்றில் வாதாடிய சட்டத்தரணிகளால் சுட்டிகாட்டப்பட்டது.

இதனையடுத்து முல்லைத்தீவு பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரியை மன்றுக்கு அழைத்த மாவட்ட நீதிபதி சம்பவங்கள் குறித்து வினவியதுடன் உடனடியாக பெயரை மாற்றி எழுத்துமாறும் பௌத்த பிக்குவால் பொருத்தப்பட்டுள்ள CCTV கெமராக்களை உடனடியாக அகற்றுமாறும் கட்டளையிடடார்.

இதனையடுத்து பெயர் நீராவியடி பிள்ளையார் ஆலயம் என மாற்றி எழுதப்பட்டுள்ளது. ஆனால் CCTV கெமராக்களை பௌத்த பிக்கு அகற்ற சம்மதிக்காத நிலையில் அவை பொலிஸாரால் அக்கற்றப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.