நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்திற்கொண்டு, பாடசாலை, அரச நிறுவனங்கள் மற்றும் பிரசித்தமான இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் அணிவதை தடைசெய்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், கண்டி புனித அந்தோனியார் மகளிர் கல்லூரியில் கல்வி கற்பிக்கும் சில ஆசிரியைகள், நிக்காப் அணியாமல் பாடசாலைக்கு சமுகமளிக்க மறுத்து வருவதால், கல்லூரியின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.12 முஸ்லிம் ஆசிரியைகள் குறித்த கல்லூரியில் கடமையாற்றி வருகின்ற நிலையில், அவர்களுள் 6 பேர் சேலை அணிந்து கடமையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஏனைய 6 முஸ்லிம் ஆசிரியைகளும் சேலை அணிந்துகொண்டு பாடசாலைக்கு சமுகமளிப்பதை நிராகரித்துள்ளதுடன், தங்களது சம்பிரதாய ஆடையில் பாடசாலைக்கு சமுகமளிக்க சந்தர்ப்பம் வழங்குமாறு கேட்டுள்ளனர்.

இதன் காரணமாக, இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையான காலப்பகுதியில், கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் கற்றல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காரணத்தின் அடிப்படையில், கடந்த சில நாட்களில் கல்லூரிக்கு முன்னால் போராட்டங்கள் முன்னெடுக்கப்ப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.