கைது செய்யப்பட்டுள்ள குருணாகலை போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி தொடர்பான விசாரணைக்குழுவின் இடைக்கால அறிக்கை நாளையதினம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவின் குறித்த அறிக்கை இன்றையதினம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் மேலும் சில விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டி இருப்பதால், நாளை வரையில் அதனை ஒத்திவைத்திருப்பதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லால் பனாபிட்டிய தெரிவித்துள்ளார். இதேவேளை, குறித்த வைத்தியருக்கு எதிராக இதுவரையில் 341 முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இன்று மாத்திரம் 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 97 முறைப்பாடுகள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வருமானத்தை மீறி சொத்து சேர்த்தமை தொடர்பில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளகியுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து சி.ஐ.டி.யினர் தொடர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், அந்த குற்றச்சாட்டும், அதனோடு இணைந்த கருத்தடை குற்றச்சாட்டின் பின்னணியிலும் குருணாகல் பிரதேசத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் உள்ளதாக தகவல்கள் சில வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குருணாகல், குளம் அமைந்துள்ள பகுதியை அண்மித்த கட்டடம் ஒன்றினை கொள்வனவு செய்த விவகாரத்தில், குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நண்பர் ஒருவருக்கும் வைத்தியர் ஷாபிக்கும் இடையே நிலவிய போட்டியே இந்த குற்றச்சாட்டுக்களுக்கு காரணமாகியுள்ளதாக குறிப்பிடப்படும் நிலையில் அந்த விடயம் குறித்தும் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு விசாரணைகளில் அவதானம் செலுத்தியுள்ளது.

அதன்படி குருணாகல் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், அங்கிருந்து வேறு ஒரு இடத்துக்கு இடமாற்றி அது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தின் அவதானம் திரும்பியுள்ளது. விடயம் குறித்து விசாரிக்கும் சிறப்பு சி.ஐ.டி.குழுவிடம் இது தொடர்பில் அலோசித்து, தேசிய பொலிஸ் ஆணைக் குழுவுடனும் கலந்துரையாடி பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன ஊடாக இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன. எவ்வாறாயினும் வைத்தியர் ஷாபிக்கு எதிரான சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பிலும் சட்டவிரோத கருத்தடை விவகாரம் தொடர்பிலும் விசாரிக்க விஷேட சி.ஐ.டி. குழுவொன்று குருணாகலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.