குறுகிய காலத்தில் நாட்டினுள் தாக்குதகள் நடத்தப்படும் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது. பதட்டகரமான சூழல் ஒன்று உருவாவது 99 வீதம் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும் கண்காணிப்பு பலவீனமானால் எதிர்காலத்தில் மீண்டும் சிக்கல் ஏற்படலாம் என பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் தெரிவித்தார். குருநாகல் பகுதியில் குழப்பமேட்படுத்த தேரர்கள் சிலரும் அவர்களுடன் இணைந்து பலம்பொருந்திய நபர்கள் சிலரும் முயற்சித்தனர் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து உண்மைகளை கண்டறிந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்று முதல் தடவையாக கூடியது. நேற்றைய தினம் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொடவிடம் தெரிவுக்குழு எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இந்த காரணிகளை முன்வைத்தார்.

அவர் கூறுகையில்.
தற்போது நாட்டில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதலை அடுத்து அவற்றை இல்லாதொழிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வௌ;வேறு கட்டங்களில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

24 மணிநேர தேடுதல் மற்றும் கண்காணிப்பு நகர்வுகள் மூலமாக நாட்டுக்கான அச்சுறுத்தல் 99 வீதம் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த பயங்கரவாத செயற்பாடுகள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகள் போன்று கருத முடியாது. இவர்களிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லை. வெடிபொருட்கள் இருந்துள்ளது. ஆனால் இவர்களை பொறுத்தவரை மனநிலை தான் இவர்களின் ஆயுதம் என்றே கருத வேண்டும்.

அதேபோல் இந்த நாட்டில் சிங்கள தமிழ் ஆங்கில மொழிகள் உள்ள நிலையில் அரபி மொழிகள் அவசியம் இல்லை என்பது எனது தனிப்பட்ட ஆலோசனையாக பதிவுசெய்ய முடியும். அதேபோல் சில கல்வி முறைகள் இந்த நாட்டிற்கு அவசியமில்லை. இவ்வாறான செயற்பாடுகள் தான் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குருநாகல் பகுதியில் நேற்று முன்தினம் குழப்பம் ஒன்றினை ஏற்படுத்த சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிமாவட்டங்களில் இருந்து நபர்கள் அங்கு குழப்பங்களை ஏற்படுத்த திட்டம் தீட்டியுள்ளனர். இதில் தேரர்கள் சிலரும் பலம்பொருந்திய நபர்கள் சிலரும் இருந்துள்ளனர்.

எனினும் எமது படைகளை கொண்டு உடனடியாக இவற்றை தடுக்க எம்மால் முடிந்துள்ளது.இந்த விடயங்களில் ஊடகங்களின் பங்கு மிகவும் அவசியமாகும். இன்று சமூக ஊடகங்களின் மூலமாக தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு அனாவசியமாக குழப்பங்கள் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அண்மையில் கூட (யு. என்)அடையாளம் பொறித்த எமது வாகனங்கள் பயணித்ததை அமெரிக்க படையினர் இலங்கையில் இருப்பதாக ஊடகங்கள் பரப்பியது. இதெல்லாம் மோசமான செயற்பாடு என்றார்.