அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. இவை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விடயங்கள் கிடையாது.

இவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ரிஷாத்தின் அரசியல் அதிகாரம் தடையாக இருக்கும் என்பதால் அவர் அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். ஜாதிக ஹெல உறுமய தலைமையகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது, பாராளுமன்றத்தில் இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கெதிராக ஒன்றும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக ஒன்றும் சமர்பிக்கப்பட்டுள்ளது. அவற்றில் அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி சமர்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை முதலில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளும் நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அந்த காரணங்கள் அவருக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலனவை உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களாகும்.

ஒருபுறம் கைது செய்தவர்களை விடுவிக்குமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம் கிடையாது. பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினரால் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கூடாகவே இந்த விடயம் கையாளப்பட வேண்டும்.

அரசியல் செய்யக் கூடிய விடயம் இதுவல்ல. காரணம் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மை தன்மை இல்லை.

ரிஷாத் பதியுதீன் அமைச்சு பதவியில் இருக்கும் போதோ அல்லது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் போதோ இது தொடர்பில் விசாரணைகளை நடத்த முடியுமா என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். விசாரணைகள் நடத்தப்படும் போது அவர் தனது அரசியல் அதிகாரங்களை பயன்படுத்துவாரா? அல்லது அவரது அரசியல் பலம் விசாரணைகளுக்கு தடையாக இருக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

எனவே ரிஷாத் பதியுதீன் அமைச்சு பதவியிலிருந்து தானாக விலக வேண்டும். அத்தோடு இந்த விசாரணைகளை பொலிஸாரிடம் வழங்கி , அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை வெகு விரைவாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதற்கமைய அராங்கமும், சட்டம் ஒழுங்கு பிரிவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும். இல்லையென்றால் அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதன் காரணமாக நாட்டில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, விரைவான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனை வைத்து பிரச்சினைகளை ஏற்படுத்தவும் சிலர் முயற்சிக்கின்றனர். இவற்றுக்கான சிறந்த தீர்வாகவே நாம் இதனைக் கருதுகின்றோம்.

ரிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டு;ள்ள விடயங்கள் நேரடியாக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவினால் ஆராயப்பட வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ரிஷாத் பதியுதீன் அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும். அத்தோடு விசாரணைகள் பல வருடங்களுக்கு இழுத்தடிக்கக் கூடியதொன்றும் அல்ல.

வெகு விரைவாக விசாரணைகளை முன்னெடுத்து அது தொடர்பான அறிக்கையை பாதுகாப்பு அமைச்சு பாராளுமன்றத்தில் சமர்பிக்க வேண்டும். அத்தோடு ஜே.வி.;பி சமர்பித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சபாநாயகர் கருஜய சூரிய விரைவாக கட்சி தலைவர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து விவாத்திற்கு எடுத்துக் கொள்வதோடு வாக்கெடுப்பும் நடத்தப்படவேண்டும் என்றார்.