கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி போடப்பட்ட மாணவிகள் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மூளாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தரம் 6ல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி பிரதேச வைத்திய அதிகாரி பணிமனையின் ஊடாக பாடசாலையில் வைத்து போடப்பட்டது.

ஊசி போடப்பட்டு சில நிமிடங்களில் மாணவிகள் சோர்ந்து மயங்கும் நிலைக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து மாணவிகளை அருகில் இருந்த சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.ஒரு மாணவி மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். சம்பவம் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமையினர் கூறுகையில், குறித்த ஊசி ஏற்றப்பட்டதும் சில நிமிடங்கள் சோர்வு நிலை ஏற்படும்.

அது மாணவிகளின் உடல் நிலையை பொறுத்து அமையும். ஊசி போடப்படும் அறை காற்றோட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். விசாரணைகளின் பின்னரே உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிட முடியும் என தெரிவித்துள்ளனர்.