சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதக் குழு தொடர்பில் உளவுத்தகவல் வழங்கிய நான்கு பேர், ஏப்ரல் 21ம் திகதி நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தகவல் வழங்கிய முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு எதிர்வரும் 11 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. இதன்போது, உளவுத் தகவல்களை வழங்கியவர்களிடம் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எந்த காலப்பகுதியில் தகவல்கள் வழங்கப்பட்டன, அது குறித்து மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பன குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.