வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு கல்வி பொது தராதர சாதாரண தர, உயர்தர பரீட்சைகளுக்கு வெளிநாடுகளில் இருந்தே பரீட்சைகளை எழுதுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சட்டத்தரணி அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்கால கல்வி மேம்பாட்டுக்கு அடிப்படை வகுக்கப்படுவதாகவும் இதற்கு புதிய வழிமுறைகளை அடையாளம் கண்டு வரையறைகளுக்கு அப்பால் அனைவரும் செயற்படுவார்களாயின் பல மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஒன்றாகவே பரீட்சை சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பரீட்சைகள் திணைக்களத்தை நவீன மயப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நியமிக்கப்பட்ட புத்திஜூவிகளின் குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையில் கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை இணையத்தளம் மூலம் (Online) வழங்குவதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக பரீட்சை திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் உரையாற்றுகையில் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

பரீட்சைகள் திணைக்களம் மிகுந்த நம்பிக்கையை கொண்ட இடமாக இருக்க வேண்டும். இதற்காக பல நடைமுறைகளை கையாள வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் பல்வேறான தனியார் தலையீட்டை முடிந்த வரையில் குறைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர் முறையான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையையும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தாம் கல்வி அமைச்சராக பதவி ஏற்று 4 வருட காலப்பகுதிக்குள் பல புரட்சிகரமான மற்றும் முக்கிய பல மாற்றங்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)