யாழ். கொக்குவில், மஞ்சவனப்பதி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆவா குழு உள்ளிட்ட வன்முறையாளர்களை நேரடிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் அழைப்பு விடுத்திருந்த நிலையில் வன்முறைக் கும்பல் ஒன்று இத் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்றே இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பல பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மானிப்பாய் செல்லமுத்து மைதானம் ஊடாக இன்று மாலை 2 மோட்டார் சைக்கிள்களில் 04 பேர் வாள்களுடன் பயணிப்பதை அவதானித்த பொதுமக்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.