மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி, சர்வமத குருமார்களால் நான்கு நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் நிர்வாக முடக்கல் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கோரியுள்ளார்.

இதேவேளை, கல்முனை வடக்கு தமிழ் பிரேதச செயலகத்தை தடை செய்ய கோரி, முஸ்லிம் பிரதிநிதிகள் இன்று சதியாகிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். கல்முனை ஐக்கிய சதுக்க முன்றலில் இந்த போராட்டம் இடம்பெற்றுவருகிறது. இனத்துவ அடிப்படையிலும் நிலத் தொடர்பற்ற வகையில் உருவாக்கப்பட எத்தனைக்கும் பிரதேச செயலகத்தை தடை செய்யுமாறு அவர்கள் கோருகின்றனர். இந்த போராட்டத்தில் மாநகர முதல்வர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.