ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் ஒன்பதாவது பொதுச்சபைக் கூட்டம் 22.06.2019 சனி மற்றும் 23.06.2019 ஞாயிறு ஆகிய இரு தினங்கள் வவுனியா உமாமகேஸ்வரன் வீதி சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக கட்சியின் ஸ்தாபகர் அமரர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் நிகழ்வில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் பொதுச்சபை ஏற்பாட்டுக்குழு தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த பொதுச்சபை கூட்ட அறிக்கை செயலாளரால் வாசித்தளித்தார். கட்சியின் கணக்கறிக்கையினை பொருளாளர் வாசித்தார். இதனையடுத்து தலைவர் திரு. த.சித்தார்த்தன் அவர்கள் இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கட்சியின் செயற்பாடுகள் குறித்தும் நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் சிக்கல் நிலைமைகள் பற்றியும் பேராளர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து மூத்தோர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நீண்டகாலமாக கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் நின்ற மூத்தவர்கள் இருவர் தலைவர் திரு. த. சித்தார்தன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கட்சி முக்கியஸ்த்தர்கள், கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை அங்கத்தவர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்களின் உரைகளும் , ஜேர்மன் பிரதிநிதி திரு.ஜெகநாதன் , சுவிஸ் பிரதிநிதி திரு.ரட்ணகுமார் , லண்டன் பிரதிநிதி திரு.பாலா மற்றும் கலாநிதி சுரேஷ் சுரேந்திரன் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.

இதனை தொடர்ந்து கட்சியின் புதிய செயற்குழுவும் உயர்பீடமும் தெரிவு செய்யப்பட்டது. இதன்போது கட்சியின் தலைவராக திரு.தர்மலிங்கம் சித்தார்தன் அவர்களும் செயலாளராக திரு.சுப்ரமணியம் சதானந்தம் அவர்களும் மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள். கூட்டத்தில் வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் , வெளிநாட்டில் இருந்து ஆறு பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.