கிளிநொச்சி பாரதிபுரம் சந்தியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற மூன்றாவது புகையிரத விபத்தில் இராணுவத்தின் மருத்துவப் பிரிவைச் சேர்ந்த ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ்தேவி ரயில் ஏ9 வீதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்த இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதில் விபத்து ஏற்பட்டது. ரயில் அருகில் வருவதனை அவதானிக்காத இராணுவ சாரதி ரயில் பாதையை கடக்க முற்பட்டபோதே விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்த இராணுவத்தினரின் உடல்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டது. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிசிக்சைப் பெற்று வந்தவர்களுள் மற்றுமொரு இராணுவ சிப்பாயும் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.