தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு இன்று (30.06.2019) யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் இராசமாணிக்கம் அரங்கில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாநாட்டு மண்டபத்தில் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து வரவேற்புரை இடம்பெற்று, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. அடுத்து, தமிழரசுக் கட்சி மாநாட்டு தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழரசுக் கட்சித் தலைவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றன. அத்துடன் அருட்திரு இமானுவல் அடிகளாரின் இரண்டு புத்தகங்களும் வெளியிட்டு வைக்கப்பட்டன. நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசு கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், தமிழரசுக் கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்,

எம்.ஏ. சுமந்திரன், ஈ.சரவணபவன், சிவஞானம் சிறீதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீநேசன், சிவமோகன் மற்றும் துரைரெட்ணசிங்கம், யோகேஸ்வரன் ஆகியோருடன் அருட்தந்தை இமானுவல் அடிகளார் மற்றும் மதத் தலைவர்கள், முன்னாள் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், வட மாகாணசபை முன்னாள் அமைச்சர்கள், உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், அங்கத்தவர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.