பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் ஹேமசிறி பெர்ணான்டோவும், நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிசிக்சைப் பெற்று வந்த நிலையில், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் குற்ற விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில், உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர், கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் ஆகியோரைக் கைது செய்து, நீதிமன்றில் முன்னிலைப் படுத்துமாறு, சட்டமா அதிபர் உத்தரவிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.