மன்னார் – பேசாலை கடற்கரையில் தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி இழைப்படகு கொட்டிலுடன் தீ வைத்து எரியூட்டப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக பேசாலை 7 ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பேசாலை கடற்கரையில் படகை நிறுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஒரு தொகுதி வலைகளுடன் குறித்த கண்ணாடி இழைப் படகு, கடற்கரையில் உள்ள தற்காலிக கொட்டிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு பிற்பாடு குறித்த கொட்டில் மற்றும் கண்ணாடி இலை படகு என்பன திடீர் என தீப்பற்றி எரிந்துள்ளது. இதன்போது தீப்பற்றியதை கண்டவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர்.

இதன்போது கடற்படையினர் மற்றும் பேசாலை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். இந்நிலையில் குறித்த படகின் உரிமையாளர் நேற்று இரவு பேசாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.