தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தினம் இன்று 13ம் திகதிமுதல் எதிர்வரும் 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது.

30ஆவது வீரமக்கள் தினத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்றுகாலை 9.30அளவில் (13.07.2019) வவுனியா, கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. முதலில் செயலதிபரின் நினைவில்லத்தில் மௌன அஞ்சலி இடம்பெற்று, செயலதிபரின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதையடுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த தலைவர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி இடம்பெற்றது.

நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உபதலைவர்களுள் ஒருவரும், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமான நா.சேனாதிராசா, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர்கள் சு.ஜெகதீஸ்வரன், வே.குகதாசன், த.யோகராஜா, சி.கேசவன், இந்திரமூர்த்தி, ரவி, பிரதேச சபை உறுப்பினர்கள் உத்திரியநாதன், நந்தன், ஓய்வுநிலை அதிபர் சோதிமாஸ்டர் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். வீரமக்கள் தினத்தை முன்னிட்டு தாக சாந்தி நிலையமும் நடாத்தப்படுகிறது.