யாழ். கந்தரோடை, ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா 15.07.2019 காலை 9மணியளவில் கல்லூரியின் அதிபர் திரு. செல்வஸ்தான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் அழைப்பையேற்று நிகழ்வின் பிரதம விருந்தினராக மாண்புமிகு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில் விருந்தினர்களாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஸ்கந்தவரோதயன் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கோரிக்கைக்கமைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட விசேட நிதியான 5கோடியே 80லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கல்லூரியின் கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்லினை பிரதமர் அவர்கள் நாட்டி வைத்தார். இதனையடுத்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.

இறைவணக்கம், தேசிய கீதம்,வரவேற்பு நடனம், வரவேற்புரை, அதிபரின் உரை என்பவற்றையத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உரைநிகழ்த்தினார்கள். அடுத்து, பரிசில்களை வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

மேற்படி நிகழ்வில் மதகுருமார்கள், ஸ்தாபகர் குடும்ப உறுப்பினர்கள், உயரதிகாரிகள், மாகாணக் கல்வியமைச்சின் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள், கல்லூரியின் முன்னைநாள் அதிபர்கள், அயற் பாடசாலைகளின் அதிபர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரியின் கல்விசார் கல்விசாரா உத்தியோகத்தர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தார்கள்.