யாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல் நாட்டும் வைபவம் இன்று பிற்பகல் 12.30மணியளவில் சுன்னாகம் தபாலக வளாகத்தில் நடைபெற்றது.

சுன்னாகம் நகர அபிவிருத்தி சபையின் தலைவர் சி.குமரவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புதிய தபால் நிலையத்திற்கான அத்திபாரக் கல்வினை நாட்டிவைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண துணை அஞ்சல் அதிபர் மதுமதி வசந்தகுமார், சுன்னாகம் தபால்நிலைய தபாலதிபர் திருமதி மஞ்சுளா ராஜராஜன், உடுவில் பிரதேச செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும் நிகழ்வில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சன், சுன்னாகம் நகர அபிவிருத்தி சபையின் செயலாளர் சபா புஸ்பநாதன், முன்னைநாள் நகரசபை உறுப்பினர் கிசோர், நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், பேரின்பநாயகம் உள்ளிட்ட சுன்னாகம் நகர அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் இணைப்பாளர் யுகராஜ் மற்றும் தபால்நிலைய அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கோரிக்கைக்கமைய  தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சர் கௌரவ மனோகணேசன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட விசேட நிதியான 2கோடியே 80லட்சம் ரூபா செலவில் புதிய தபாலகம் நிர்மாணிக்கப்படுகின்றது.