திருகோணமலை மாவட்டத்தின் கன்னியாவில் மதத் தலைவர் மற்றும் ஆலய உரிமையாளர் மீது மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான தாக்குதல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்திருக்கும் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,

புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது கன்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க தொடர்ந்தும் அனைவரும் உழைப்போம் என்றார். தமிழ் மக்களின் பிரச்சினைகளில் அரசாங்கம் இரு விதமான கருத்தை அல்லது இரு முகத்தைக் காட்டுகின்றதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாவில் ஆலயத்திற்குச் சென்ற மக்கள் சார்பில் இருவரை தங்கள் பாதுகாப்பில் வாருங்கள் என அழைத்து சென்ற பொலிஸார் முன்னிலையிலேயே தென் கயிலை ஆதீனம் மீதும் பிள்ளையார் ஆலய உரிமையாளர் கோகிலறமணி அம்மையார் மீதும் காடையர் தேனீர் ஊற்றியிருக்கின்றனர். இதன்போது இவர்களை அழைத்துச் சென்ற பொலிஸாரும்; இதனைப் பார்த்துக் கொண்டிருந்ததுடன் இந்த விடயத்தில் எதுவித கவனத்தையும் செலுத்தாமல் அலட்சியப் போக்கில் செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, மதத் தலைவர் மற்றும் காணி உரிமையாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களையும் தங்கள் பாதுகாப்பில் வாருங்கள் என அழைத்துச் சென்ற பொலிஸார் இந்த விடயத்தில் நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததையும் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்தோடு மதத் தலைவர் மீது அநாகரிகமான முறையில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றோம்.

மதத் தலைவர்கள், பொதுமக்கள் பெருமளவில் கூடியிருந்த நிலையில் அனைவர் மத்தியிலும் நம்பிக்கை அளித்து பொலிஸார் அழைத்துச் சென்ற மதகுரு மற்றும் காணி உரிமையாளர் ஆகிய இருவருக்கும் எதிராக காடைத்தனமாக நடந்து கொண்டிருக்கின்றனர். இந்தக் காடையர்களின் தாக்குதல் மிக மிக கண்டிக்கத்தக்கது. இவ்வாறான தாக்குதல்களை அல்லது அச்சுறுத்தல்களை விடுத்து தாம் நினைத்ததை அல்லது விரும்பியதைச் செய்யலாமென்று கருதுகின்றனர்.

ஆனால், தமிழ் மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது. இவ்வாறான தாக்குதல்களைக் கண்டு பயந்து தமிழ் மக்கள் ஓய்ந்துபோகப் போவதுமில்லை. தமிழ் மக்களின் கன்னியாவை மீண்டும் மீட்டெடுப்போம். அதனை மீண்டும் எங்கள் பிரதேசமாக்குவோம். அதற்கான அனைவருமான தொடர்ந்தும் உழைப்போம் என்றார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போது கன்னியா விவகாரம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அதாவது கன்னியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை பிரதமருக்கு எடுத்துக் கூறி அங்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

தற்கமைய பிரதமரும் இந்த விடத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அமைச்சர் அபேயவர்த்தவை அழைத்த பிரதமர் விவகாரம் தொடர்பில் சுமூகமான தீர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பணித்திருந்தார். அதனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு அமைச்சரினால் திருகோணமலை மாவட்ட அரச அதிபருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த விடயங்கள் அன்றைக்கு நடந்தது உண்மைதான். இவ்வாறான நிலையில் அங்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தமது ஆதிக்கத்தின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை அங்கு மேற்கொண்டுவருகின்றனர்.

இது அமைச்சருக்கு தெரியுமோ தெரியாதோ என்பது தெரியவில்லை. ஆகவே எங்களுக்கு முன்னால் சொன்ன விடயங்களை அமைச்சர் கடைப்பிடிக்கின்றாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆக மொத்தத்தில் எங்களிடம் ஒரு கதையையும் அவர்களிடம் இன்னொரு கதையையும் சொல்கின்றனரா என்ற கேள்வி எழுகின்றது என்றார்.