நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்காது என்பது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தினூடாக தெளிவாக விளங்கி விட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே சித்தார்த்தன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படுமென பலர் நினைத்தார்கள். அதற்கான ஆரம்ப ஏற்பாடுகள் கூட செய்யப்பட்டிருந்தன.
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக அரசியல் நிர்ணய பேரவை அமைக்கப்பட்டு அதற்குள் 4,5 குழுக்கள் இருந்தன. அதில் ஒன்றில் தலைவராகக் கூட இருந்தேன். இவ்வாறு பல முயற்சிகள் எடுக்கப்படடிருந்த காலத்தில் கூட எங்களைப் பொறுத்தவரை நியாயமான தீர்வுகள் எட்டப்படாவிட்டாலும், அவற்றுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கினோம்.

எங்களால் முடிந்தளவு ஒரு நியாயமான அறிக்கையை எம்முடைய குழுவுடன் இணைந்து வழங்கினோம். இவ்வாறான விடயங்கள் நீண்டகாலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன.

சர்வதேச அழுத்தங்களினால், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையிலினால் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளாக இருக்கின்றமையால் நியாயமான தீர்வு கிடைக்குமென எல்லோரும் எதிர்பார்த்தார்கள். எனினும், வழமைபோன்று குறித்த நடவடிக்கைகளெல்லாம் தற்போது கைவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்னும் 2 வருடங்க்களாலேயே தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்கும். ஆனால், இந்த அரசாங்கத்தினால் அல்ல என பிரதமர் கூட அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறினார்.

அதாவது, எதிர்வரும் அரசாங்கத்தினாலேயே தீர்வு கிடைக்குமென்பதையே பிரதமரின் இந்தக் கருத்தினூடாக வலியுறுத்தியுள்ளார். ஆகவே, இனியும் தீர்வு கிடைக்குமென எதிர்பார்ப்பது ஏற்புடையதல்ல என சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். (நன்றி, யாழ். தினக்குரல் 18.07.2019)