யாழ். மானிப்பாய் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும் இன்று (19.07.2019) வெள்ளிக்கிழமை நண்பகல் 1.30மணியளவில் கல்லூரி மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் திருமதி நர்மதா பரமேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், தேசியக் கொடியேற்றல், பாடசாலைக் கொடியேற்றல் என்பன இடம்பெற்றன. தேசிய கீதம், பாடசாலை கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராம எழுச்சி விசேட நிதியினூடாக புனரமைக்கப்பட்ட சிறுவர் முற்றத்தினை பிரதம விருந்தினர் அவர்கள் திறந்துவைத்து, பெயர்ப் பலகையையும் திரைநீக்கம் செய்துவைத்தார்.

மாணவிகளின் பாண்ட் வாத்திய இசையோடு விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து வரவேற்பு நடனம், வரவேற்புரை, நூல் வெளியீட்டுரை இடம்பெற்று இளநங்கை பரிசளிப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. முதற் பிரதியினை எஸ் தேவராஜ் (செயலாளர் மானிப்பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் லண்டன்) அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து சிறப்பு பிரதிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கல் இடம்பெற்று மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் உதவி, பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், அயற் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை சார் பெரியோர்கள், பழைய மாணவர் சங்க அங்கத்தவர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள், மாணவர்கள் என  கலந்துகொண்டிருந்தார்கள்.