யாழ். நீர்வேலி வடக்கு பன்னாலை சிவசக்தி முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா-2019 நிகழ்வானது இன்று (20.07.2019) சனிக்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் சிவசக்தி சனசமூக நிலையத் தலைவர் கு.சுரேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக கு.ரவிச்சந்திரன் (அதிபர் யா.அத்தியார் இந்துக் கல்லூரி நீர்வேலி), சி.தர்மரட்ணம் (அதிபர் யா. நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை), பா.பிறேமசியா (கிராம சேவையாளர், நீர்வேலி வடக்கு), ம.சுதர்சன் (வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் நீர்வேலி வடக்கு), இ.சுகிர்தன் (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், நீர்வேலி வடக்கு) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக இ.செல்வராசா (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மத்தியகுழு உறுப்பினரும், வலிகிழக்கு பிரதேசசபை உறுப்பினரும்), கி.வினோதா (ஆசிரியை யா.ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி, புத்தூர்), ந.தேவிகா (விளையாட்டு பயிற்றுவிப்பாளரும், சமாதான நீதவானும்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து சிறார்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது.

இறைவணக்கம், கொடியேற்றல், வரவேற்புரை, ஒலிம்பிக் தீபமேற்றல், சத்தியப்பிரமாணம் என்பன இடம்பெற்றதைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் அவர்கள் விளையாட்டு விழாவினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இதனையடுத்து பிரதம விருந்தினருக்கு நினைவுப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது. உடற்பயிற்சி, விளையாட்டுக்கள், விநோதவுடை, தலைமையுரை, விருந்தினர்களின் உரை என்பன இடம்பெற்று பரிசில் வழங்கலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.