யாழ். சுதுமலை அம்பாள் சனசமூக நிலையம் மற்றும் அம்பாள் விளையாட்டுக்கழகம் நடாத்தும் பொன்விழாவும் கட்டடத் திறப்பு விழாவும் நேற்று (20.07.2019) சனிக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் அம்பாள் சனசமூக நிலைய முன்றலில் அம்பாள் சனசமூக நிலையத் தலைவர் சந்திரமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். கௌரவ விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், அம்பாள் சனசமூக நிலைய ஸ்தாபகர் இ.தங்கராஜா ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக வலி தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் அ.ஜெபநேசன், பண்டிதர் க.ஈஸ்வரநாதப்பிள்ளை, வலிதென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர் பே.சுபாகர், உயரப்புலம் கிராம அலுவலர் எம்.ஆர்.கே. ரட்ணராஜா, அம்பாள் சனசமூக நிலைய ஆரம்பகால செயலாளர் வை.சின்னத்துரை, ஒய்வுநிலை அதிபர் எஸ்.நாகையா ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக ஆலய வழிபாடு இடம்பெற்று, விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டனர். இறைவணக்கம், கொடியேற்றல் என்பவற்றையடுத்து நிலையத் திறப்புவிழா இடம்பெற்றது. நிலைய புதிய கட்டடத் தொகுதியை பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்கள் திறந்துவைத்தார்.

தொடர்ந்து புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது. விருந்தினர்கள் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டதோடு மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம், வரவேற்புரை,  தலைவர் உரை, விழா ஏற்பாட்டுக்குழு தலைவர் உரை, விருந்தினர்கள் உரை, பொன்விழா மலர் வெளியீடு என்பன இடம்பெற்றன. அடுத்து, கற்றல் நடவடிக்கைகளிலும், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிபெற்றவர்களுக்கான வெற்றிக் கேடயங்களும், பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டதோடு, சாதனையாளர் கௌரவிப்பும் இடம்பெற்றது. நிகழ்வில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.