சய்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்றவர்களை மூன்று வாரங்களுக்குள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சய்டம் தனியார் மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற எஸ்.எம் ஹால்பே, டீ.டி பட்டுவாவல மற்றும் கே.பீ மாரபன ஆகியவர்கள் முன்வைத்த அடிப்படைய உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது புலனெக அலுவிகார, பிரீதி பத்மன் சூரசேன மற்றும் எல்.டி.பீ தெஹிதெனிய ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன, இலங்கை மருத்துவ சபை மனுதாரர்களுக்கு மருத்துவ வல்லுநனர்கள் என்ற ரீதியில் பதிவு செய்யாமல் இருப்பது மூலம் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை மருத்துவ சபை சட்டத்திற்கு அமைய அவர்களினால் அவ்வாறு செய்ய முடியாது எனவும் குறித்த மாணவர்களை பதிவு செய்யுமாறு இதற்கு முன்னரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலும் உயர் நீதிமன்றத்தினாலும் உத்தரவிடப்பட்டிருந்தமையை நினைவு படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மூன்று வாரங்களுக்குள் மருத்துவ வல்லுநனர்கள் என்ற நீதியில் அவர்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதுடன் வழக்கு கட்டணமாக மனுதாரர்களுக்கு 2 இலட்சம் ரூபா வீதம் வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.