யாழ். சாவகச்சேரி நகரசபை எல்லைக்கு உட்பட்ட ஏ9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள 2 வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஒன்றுமே தீப்பற்றி எரிந்தாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தீவிபத்தில் பழக்கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தை அடுத்து யாழ். மாநகர சபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததை அடுத்து மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை யாழ். உரும்பிராய் – கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை உரும்பிராய் கிருஷ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள் ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில், பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி நிலைகுலைந்து டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றது என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது. விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.