யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அங்கு பலதரப்பட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று முற்பகல் 9.45 அளவில் பிரதமர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தை திறந்து வைக்கவுள்ளார். இதன்பின்னர், மயிலிட்டி வடக்கு பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடமைப்பு தொகுதிகளை திறந்து வைக்கவுள்ளார். இது தவிர அவர் இன்றைய தினம் நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ். நாகவிகாரைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.