மிக நீண்டகாலத்தின் பின் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள யாழ். மயிலிட்டி துறைமுகம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமக்களிடம் நேற்றுக் காலை கையளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வருடங்கள் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் முடக்கப்பட்டிருந்த மயிலட்டி துறைமுகம்நல்லாட்சி அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்டதுடன் மக்களின் நீண்டகால கோரிக்கையான துறைமுக அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

சுமார் 150 மில்லியன் ரூபாய் செலவில் மயிலிட்டி துறைமுகத்தின் புனரமைப்பு பணிகள் 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

புனரமைப்பு பணிகளின் முதல் கட்டம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மீன்பிடி வலை தயாரிக்கும் நிலையம், சனசமூக நிலையம், எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியற்றை திறந்து வைத்த பிரதமர், துறைமுக புனரமைப்பு நினைவு கல்லையும் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், மயிலிட்டி மக்கள், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், அைமச்சின் செயலாளர் சிவஞானசோதி, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், அமைச்சர் ஹரிசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், நகரசபை, பிரதேசசபை உறுப்பினர்கள், கல்விச் சமூகத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.