இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கு இடையில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்தாகியுள்ளன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாலைத்தீவு விஜயத்தின் போது இந்த ஒப்பந்தங்களை கைச்சாத்தாகியுள்ளன.

இந்த விஜயத்தின் போது, நேற்று பிற்பகல் மாலைத்தீவின் ஜனாதிபதி மாளிகைக்கு சென்ற பிரதமர் அந்நாட்டு ஜனாதிபதி ஈப்ராஹிம் மொஹமட் சோலிவை சந்தித்தார்.

இருவருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு அதனை தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

இதன்போது, இருநாட்டிற்கும் இடையிலான விசா வௌியீட்டை மேலும் இலகு படுத்தல், சமூக பாதுகாப்பு, உயர் கல்வி, தொழில் பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி துறைகள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் மாலைத்தீவு பாராளுமன்றில் உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அங்கு உரையாற்றிய அவர், 25 வருட தீவிரவாதத்தால் நாங்கள் பாதிக்கப்பட்டிருந்தோம். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பால் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல் ஏனைய தீவிரவாத தாக்குதலை போல் இன்றி மாறுபட்டதாகும். இந்த துன்பியல் அனுபவத்தில் இருந்து நாம் அநேகமான விடங்களை கற்றுக் கொண்டோம்.

ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலுக்கு முகங்கொடுக்க பிராந்திய நாடுகளுடன் இணைந்து செயற்பட இலங்கை தயாராக உள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம். நாம் எவரும் தவிர்க்க முடியாது அச்சுறுத்தலாகும்.

உங்களது தீவு கடல் நீரில் மூழ்கும் ஆபத்து காணப்படுகிறது. கடல் நீர் மட்டம் அதிகரிப்பு மற்றும் பசுமை விளைவுக்கு எதிராக உங்களின் போராட்டத்திற்கு எந்த ஒரு விதத்திலும் உதவ தயாராக உள்ளதாக நான் உறுதியளிக்கிறேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.