தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்த பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 10 குறிச்சி பகுதியில் இன்று (7) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிய வேளை பாடசாலை மாணவி மீது திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் தரையில் வீழ்ந்து இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் கதிர்காமத் தம்பி வீதி நடேஸ்வரராஜன் அக்ஸயா (வயது-17) என்பவர் ஆவார்.

சம்பவம் இடம்பெற்ற வேளை தாய், தந்தை எவரும் வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவியின் சகோதரர் மாத்திரமே இந்த சம்பவத்தை முதலில் அவதானித்து அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நேரத்தில் பரவியிருந்த தீயினை அயலவர்களின் உதவியுடன் அணைத்ததாக அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட மாணவி காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மின்னொழுக்கினால் எவ்வாறு தீ பரவியது. கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.