கள்ள மணல் அள்ளிச் சென்ற டிரக்டர் மீது விசேட அதிரடிப் படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞன் ஒருவன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை நெளுக்குளம் பகுதியில் இன்று (14) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கி. ரஜீவன் (வயது 20) என்ற இளைஞனே​ காயமடைந்துள்ளார்.

அரியாலை பகுதியில் டிரக்டர் வாகனத்தில் கள்ள மணல் ஏற்றி சென்ற போது விசேட அதிரடிப் படையினர் குறித்த நபரை நிறுத்தியுள்ளனர்.

இருப்பினும் குறித்த நபர் டிரக்டர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதை அடுத்து, விசேட அதிரடிப் படையினர் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது டிரக்டர் வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரின் காலில் தோட்டா பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு காயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.