தாமரை தடாகத்தின் நிர்மாண பணிகளில் இருந்து சீனாவின் ALIT நிறுவனம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கமால் விலக்கிகொண்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியால் தனக்கு தொலைபேசி ஊடாக வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய முன்னெடுத்த விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாமரை கோபுரத்தின் நிர்மாண பணிகளுக்காக 2012ஆம் ஆண்டு சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட  2 பில்லியன் பணத்துக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த  16ஆம் திகதி கருத்து வெளியிட்டிருந்தார்.

முன்னதாக, தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டு இதனை ஜனாதிபதி கூறியுள்ளதாக  தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட கடந்த 17 ஆம் திகதி கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், 18 ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷ, 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 9ஆம் திகதி தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊடாக, பிரதான ஒப்பந்ததாரரான சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு இரண்டு பில்லியன் ரூபாய் அனுப்பப்பட்டுள்ளாக அது தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன், தாமரை தடாகத்தின் நிர்மாண பணிகளில் தற்போதுவரை சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனம் மாத்திரமே ஈடுபட்டு வருவதாகவும் குறித்த இரண்டு பில்லியன் ரூபாய் பணத்தை சீனாவின் ALIT நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய, ஆரம்பம் முதல் இதுவரை அனைத்து கொடுப்பனவுகளும் பிரதான ஒப்பந்ததாரரான சைனா நெஷனல் இலக்ரோனிக் நிறுவனத்தின் வங்கி கணக்குக்கு மாத்திரமே செலுத்தப்படுவதை ஆணவங்கள் உறுதிப்படுத்துவதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.