செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலின் தீர்த்தக்கரையில் புத்த பிக்குவின் உடல், நீதிமன்ற உத்தரவை மீறி தகனம் செய்யப்பட்டமை இலங்கையில் நல்லாட்சி, நல்லிணக்கம் போன்ற திரைகளால் முகத்தை மூடிக்கொண்டிருக்கும் பௌத்த சிங்கள பேரினவாதத்தின் உண்மை முகத்தை மீண்டும் ஒரு தடவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நீதிமன்ற இறுதித்தீர்ப்பு தமக்கு சாதகமாக வராது என்பதை விசாரணையின்போது உணர்ந்த வண.ஞானசாரதேரரும் அவருடன் இணைந்த குழுவினரும் அவசர அவசரமாக செம்மலை சென்று நீதித்துறை மீதான தமது அவமதிப்பை மமதையுடன் அரங்கேற்றியுள்ளனர். .

தமக்கிருக்கக்கூடிய நியாயங்கள், அதன் காரணமான எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், தனது உடலை செம்மலைப் பிரதேசத்தில் தகனம் செய்ய வேண்டும் என்ற மரணித்த பிக்குவின் விருப்பைப் பூர்த்தி செய்யஇ மனிதாபிமானம் மற்றும் தமிழர் பண்பாட்டின் பேரால் எதிர்ப்பு காட்டாமல்விட்ட தமிழ் மக்களின் நல்லெண்ணம் நீராவியடியில் நாசம் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பு உரியமுறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்கவென நீதிமன்றால் அனுமதிக்கப்பட்ட சட்டத்தரணிகள், பிக்குகள் தலைமையிலான பௌத்த இனவாதிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான, நீதிக்கு மாறான இத்தனை அடாவடித்தனங்களையும் தடுக்கவேண்டிய காவல்துறையினரும் அரச ஆயத படையினரும் மதவெறி பிடித்த நடவடிக்கைகளுக்கே பாதுகாப்பு வழங்கியுள்ளது.

மரணமடைந்த பிக்குவின் உடல் கோவில் வளாகத்தில் எரியூட்டப்படப்போவதை அறிந்த கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தலைவர் இது குறித்து முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அறிவித்து தகனத்தைத் தடை செய்யக் கோரியிருந்தார். ஆனால் நீதிமன்ற விசாரணையில் தனக்கு முன்னதாகவே அவ்வாறு அறிவிக்கப்படவில்லையென பொலிஸ் பொறுப்பதிகாரி பொய் கூறினார். ஆனால் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டு கடிதம் வாங்கப்பட்ட ஆவணம் தவிசாளரால் நீதிமன்றில் சாட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அரசுத் தலைவர் தேர்தலில் சிறுபான்மைத் தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள சிங்கள வேட்பாளர்கள் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நேரத்திலும்கூட, சிங்கள பௌத்த கடும்போக்குவாதிகள் தமது செயற்பாடுகளை தளர்த்தத் தயாரில்லாமல் இருப்பது, இன அழிப்புச் சிந்தனை என்பது பௌத்த சிங்கள சமூகத்தில் ஆழ வேரூன்றியுள்ளதையே உணர்த்துகிறது.

ஏற்கனவே நீதித்துறையை அவமதித்து சிறைவாசம் அனுபவித்து இடையில் ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்ட ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழு மிகமிகத் தெளிவாக இது பௌத்த தேசம், இங்கு நீதிமன்ற ஆணை செல்லாது என்று கூச்சலிட்டு அட்டூழியம் செய்து நிற்கிறது.

நீண்ட வரலாற்றைக் கொண்ட நீராவியடிப் பிள்ளையார் கோவிலுக்கு, நீண்டகால இடம்பெயர்வுக்குப் பின்பு 2010 ம் ஆண்டிலும் 2013 ம் ஆண்டிலும் வழிபாட்டுக்குச் சென்ற மக்கள் படையினரால் விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். மக்கள் நீதிமன்றம் சென்று நீதி கோரியபோது, அங்கு எவ்விதமான பௌத்த சான்றுகளும் இருந்திருக்கவில்லை என்றுதான் பௌத்தமயப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருள் திணைக்களமே சாட்சி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களினதும் சைவ சமயத்தினதும் வரலாற்றைப் புறம்தள்ளி பௌத்த பிக்குகள் ஆடிய வெறியாட்டம்இ இலங்கை ஒரு பௌத்த நாடு எனும், ஏற்றுக் கொள்ளப்படமுடியாத அரசமைப்புமைப்புச் சரத்தின் மீதான சிறுபான்மையினரின் நெகிழ்வுத் தன்மையினையும் கேலிக்கூத்தாக்கியுள்ளது.

வடக்கு கிழக்கில் அமைந்துள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை ஊடறுத்து சிங்கள குடியேற்றங்களை நிறுவும் சிங்கள பௌத்த அரசின் நீண்டகால நிகழ்ச்சி நிரலின் ஆகப் பிந்திய நடவடிக்கையே மணலாற்றில் இருந்து வடக்கே 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள செம்மலையில் விகாரை அமைப்பது.

சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் பெயரால் இந்த நாட்டில் முதன் முதலாக அரசியல் படுகொலையை நிகழ்த்திய பிக்குகள் சமூகத்தை கட்டுப்படுத்த இந் நாட்டின் அரசாங்கங்கள் தொடர்ச்சியாக மறுத்து வருகின்ற நிலையில்இ சிங்கள பௌத்த சமூகத்துடன் இணைந்து வாழும் விருப்பம் சிறுபான்மைச் சமூகங்கள் மத்தியில் உருப்பெறாது.

இந்த நாட்டின் நீதித்துறை சிறுபான்மை மக்களுக்கோ சிறுபான்மை மதங்களுக்கோ பொருத்தமானது அல்ல என்பதையே மீண்டும் மீண்டும் சிங்கள பௌத்த சமூகம் தெளிவுபடுத்துகிறது. இந்த விடயத்தில், இன்னமும் இலங்கை அரசாங்கத்தின் நேர்மையற்ற, சூழ்ச்சிகரமான இராஜதந்திர செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் சர்வதேச நாடுகள் குறிப்பாக இந்துக்கள் பொரும்பான்மையாக வாழும் இந்தியா தெளிவு பெற வேண்டும்.

வண. ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்படவேண்டும். சட்ட நடவடிக்ககளில் ஈடுபடும் சட்டத்தரணிகளுக்கு, கட்சி எல்லைகளைக் கடந்து என்றும் ஆதரவாக நாம் நிற்போம்.

இலங்கையின் நீதித்துறை பௌத்த சிங்கள நலன்களுக்கானது மட்டுமே என நிறுவ தேரர்கள் சமூகம் அடாவடித்தனங்கள் செய்தாலும், எமக்கும் இருக்கக்கூடிய சிறு துரும்பும் அதே நீதித் துறைதான் என்பதை நாம் உணர வேண்டும்.

இலங்கை பௌத்த தேசம் என்பதும் சிங்களவர்களே பூர்வீகம் என்பதும் புனைகதை. இத் தீவின் பூர்வீக குடிகள் தமிழர்கள் என்பதையும் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்கள் தமிழர்களின் தொடர்ச்சியான பாரம்பரியமான வாழ்விடங்கள் என்பதையும் சர்வதேசம் ஏற்றுக் கொண்டு அங்கீகரிப்பதன் அவசியத்தை நீராவியடி சம்பவம் மீண்டும் அவர்களுக்கு உணர்த்தியுள்ளது.

இவ் உண்மையைஇ சர்வதேசசமூகமும் குறிப்பாக இந்தியாவும் உணர்ந்து பொருத்தமான நடவடிகைகளை மேற்கொள்ளத் தவறுமாயின் மியன்மாரின் இன அழிப்பைக் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்த வெட்கக்கேடான கையறுநிலையே மீண்டும் ஏற்படும் என்பதை உறுதியாகக் கூறி வைக்க விரும்புகிறோம்.

க. சிவநேசன்
பொருளாளர் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் )
முன்னாள் அமைச்சர் – வடக்கு மாகாண சபை
25.09.19