சிங்கப்பூர் அல்லது வேறொரு நாட்டைப் போல இலங்கையை மாற்ற வேண்டும் என்று கூறுவதற்குப் பதிலாக, இலங்கைக்கு ஏற்ற வகையில் முன்னோக்கி செல்லக்கூடிய பாதை ஒன்றை முயற்சிக்க வேண்டும் என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். 
அத்தகைய நடவடிக்கைக்கு இயன்ற ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை சேவையில் இருந்து விலக்குவதற்காக கொண்டு வரப்பட்ட குற்றவியல் பிரேரணை தொடர்பில் புத்தகம் வெளியிட்டதை தொடர்ந்து, கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவியல் பிரேரணையை எதிர்நோக்கிய பின்னர், முன்னாள் பிரதம நீதியரசர் இவ்வாறான கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருப்பது இதுவே முதல் முறை.

குற்றவியல் பிரேரணை தொடர்பாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதிலும், அதனை கொண்டு வர காரணமாக அமைந்த உள்ளடக்கம் குறித்து எந்தவித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை என அவர் கூறினார்.

இந்த விடயத்திற்கு பல தரப்பினர் பல்வேறு அர்த்தங்களை முன்வைத்துள்ளதால், குற்றவியல் பிரேரணையின் உண்மை விடயங்களை வெளிப்படுத்துவதற்காக புத்தகம் வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவியல் பிரேரணை மூலம் இலங்கையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதலாவது பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவியல் பிரேரணை ஊடாக தனக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும், உயர் நீதிமன்றத்தில் சேவையாற்றிய பல வருட காலத்திலும், பிரதம நீதியரசராக பதவி வகித்த காலத்திலும் அந்த குற்றச்சாட்டுக்களை ஆராயாது விட்டமை ஏன் என்ற சர்ச்சை ஏற்பட்டதாக முன்னாள் பிரதமர் நீதியசர் கூறினார்.

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென குற்றவியல் பிரேரணை ஒன்றின் ஊடாக 14 குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டமையினால், இதற்கான காரணம் என்னவென எந்தவொரு நபரும் சிந்தித்திருக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டார்.

வேறு சில விடயங்கள் வெளியானதாலேயே இவ்வாறான குற்றவியல் பிரேரணை கொண்டு வரப்பட்டதாக அனைவருக்கும் தெளிவாக வேண்டும் என அவர் கூறுகிறார்.

2011ஆம் ஆண்டு மே மாதம் தான் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து சில தரப்பினருக்கு தான் பிரச்சினை ஆகியதாலேயே, குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்டது என தனது புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு புரியும் என அவர் குறிப்பிட்டார்.

அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கத்துடனேயே தான் பிரச்சினையை எதிர்நோக்கியதாக அந்த சில தரப்பினர் யார் என வினவிய சந்தர்ப்பத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

ராஜபக்ஷ நிர்வாகத்தில் இருந்த 117 பாராளுமன்ற உறுப்பினர்கள் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதம நீதியரசருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய குற்றவியல் பிரேரணையை முன்வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, 7 அமைச்சர்களை கொண்ட குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பிரதம நீதியரசர் தவறிழைத்தவராக தீர்மானிக்கப்பட்டது.

அமைச்சர்கள் குழுவின் அறிக்கைக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியதை தொடர்ந்து, ஷிரானி பண்டாரநாயக்க பதவியை நீக்கிய அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதம நீதியரசராக மொஹான் பிரீஸை நியமித்திருந்தார்.

இந்த குற்றவியல் பிரேரணை நடைமுறைக்கு உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியில் பாரிய எதிர்ப்பலைகள் எழுந்தன.

இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட குற்றவியல் பிரேரணையில் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிராக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை என இங்கிலாந்து மற்றும் வெல்ஸ் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

´திவிநெகும” சட்டமூலமானது, அரசியலமைப்புக்கு முரணானது என ஷிரானி பண்டாரநாயக்க தலைமையிலான நீதியரசர்கள் குழாம் தீர்ப்பு வழங்கியமைக்கு பழிவாங்கும் நோக்குடனேயே இலங்கை அரசாங்கத்தினால் இந்த குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்டதாக சட்டத்தரணி ஜெப்ரி ரொபட்ஸனின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரின் தீர்ப்பை அடுத்து கோபம் கொண்ட அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி ராஜபக்ஷ குடும்பம், ஷிரானி பண்டாரநாயக்கவை பழிவாங்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, இந்த குற்றவியல் பிரேரணை தொடர்பில் விசாரணைகளை நடத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 7 அமைச்சர்கள் பக்கச்சார்பாக செயல்பட்டுள்ளதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சர்வதிகார அரசியலமைப்பு என பலராலும் விமர்சிக்கப்பட்ட அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தத்தை, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மாத்திரம் நிறைவேற்ற முடியும் என ஷிரானி பண்டாரநாயக்க தலைமையான நீதியரசர்கள் குழாம் தீர்ப்பு ஒன்றை வழங்கியமையின் ஊடாக, அந்த தீர்ப்பு பலராலும் விமர்சிக்கப்பட்டது.

சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட சட்ட விவாதங்கள் மற்றும் அது தொடர்பில் ஆராய்ந்த விடயங்களின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் பிரதம நீதியரசர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், நீதியரசர்களின் குழாமிற்கு தானே தலைமை தாங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தம் மாத்திரமன்றி, நீதியரசர் என்ற விதத்தில் நாட்டின் சட்டத்தையும், முன்வைக்கப்பட்ட சட்ட விவாதங்களையும் ஆராய்ந்து, நியாயத்தை நிலைநாட்டும் வகையிலேயே தான் அனைத்து தீர்ப்புகளையும் வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

´´தீர்ப்பு வழங்கப்படும் சந்தர்ப்பத்திலும், அரசியலமைப்பு திருத்தத்தின் போதும் அது குறித்து ஆராயப்படும் சந்தர்ப்பங்களிலும் நாங்கள் கட்சி, நிறம் அல்லது அவர் அரசாங்கத்தில் உள்ளவரா, அரசாங்கத்தில் இல்லாதவரா போன்ற விவரங்களை ஆராயவில்லை. அவ்வாறு தீர்ப்புக்களும் வழங்கவில்லை. யாருடைய மகிழ்ச்சிக்காகவோ, யாரையும் கவலைக்குள்ளாகும் நோக்கத்திலோ நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தீர்ப்புக்களை வழங்கவில்லை” என ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், தற்போதும் அழைப்புக்கள் முன்வைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், தற்போது பல குழுக்கள் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத பட்சத்தில், வேறொரு சுயாதீன வேட்பாளருக்கு உங்களின் ஆதரவு இருக்குமாறு என கேட்டபோது நிச்சயம் கிடையாது என அவர் கூறினார்.

அரசியல் மாத்திரமன்றி, அரசியல் மேடையில் ஏறி அரசியல் பேச்சுக்களை பேசுவதற்கு கூட எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் முடியும் அளவு நாட்டிற்காக சேவையாற்ற தான் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாக ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

(பிபிசி தமிழ்)