ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இதுவரை  20 ஓய்வுபெற்ற அதிகாரிகள் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின், அவர்களை சேவையில் ஈடுபடுத்தி ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற நிலையிலும், கண்டி, இறம்புக்கனை, சிலாபம், காலி மற்றும் அவிசாவளையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி ரயில்கள்  இன்று முற்பகல் வரை சேவையில் ஈடுபட்டுள்ளன.

வார இறுதி நாட்களில் பயணிக்கவிருந்த அனைத்து விசேட ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு இடையில் நாளை (30) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது