முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏழு பேர்  கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினர் இதற்கான அனுமதியை இன்று (02) வழங்கியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல்கள் அறிந்தும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமை காரணமாக அடிப்படை உரிமை மீறப்பட்டதாக தெரிவித்து இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, சிசிர டி அப்றூ, பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி.தெஹிதெனிய மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்கள் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

அத்துடன், குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியலால் தசநாயக்க ஆகியோர், தமது ஆட்சேபனை மனுக்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.