சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சேவகர்களும் எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அதற்கமைய அன்றைய தினங்களில் தத்தமது அலுவலகங்களுக்கு முன்னாளும், கொழும்பு நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்திற்கு முன்பும் ஒன்று கூடி ஆர்பாட்டங்களை நடத்துமாறு கிராம சேவையாளர்களின் தொழிற்சங்க ஒன்றியம் கேட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர் சேவையை தனியொரு சேவையாக அறிவிக்குமாறும், தமக்கு 5000 ரூபா சலுகை கொடுப்பனவை பெற்றுத் தருவதற்கான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்பிப்பதாக தெரிவித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அதனை சமர்பிக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

நாட்டில் அசாதாரண காலநிலை ஏற்பட்டால் அலுவலகத்தை பராமரிப்பதற்கு போதுமான வசதிகள் வழங்கப்படாமை, மற்றும் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமை உள்ளிட்ட பல விடயங்களின் அடிப்படையில் இந்த போராட்டம் நடத்தப்படுவதாக அந்த தொழிற்;சங்கத்தின் தலைவர் கே.டி.சுமித் கொடிகார கூறியுள்ளார்.

இந்த மாதம் 9 ஆம் மற்றும் 10 திகதிளில் இந்த போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த போதிலும் எல்பிட்டிய பிரதேச தேர்தல் நடைபெறுவதை கருத்திற்கொண்டு எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் தமது போராட்டத்தை முன்னேடுக்க போவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.