ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தொடர் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க வேண்டாம் என ரயில்வே திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் ஊழியர்களிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தொழில் உரிமையை பெற்றுக் கொள்வதற்காக சட்டத்தால் தடை விதிக்கப்படாத நடவடிக்கைகளில் ஈடுபட, அரச ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு உள்ள உரிமைகளுக்கு தாம் மதிப்பளிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளார். எனினும், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களுயை கடமைகளிலிருந்து விலகியிருக்கும் பட்சத்தில் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பொதுத்தேர்தல் அடங்கலாக மக்கள் வாக்களிப்பதற்கான செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுக்க முடியாது போகுமெனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்காரணமாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கத்தினர், பகிஷ்கரிப்பை கைவிட்டு பேச்சுவார்த்தையூடாக தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எத்தகைய நிலைமைகள் காணப்பட்டாலும் திட்டமிட்ட வகையில் குறிப்பிட்ட திகதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமெனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய மேலும் கூறியுள்ளார். இதற்கான ஒத்துழைப்பை அனைத்து இலங்கை பிரஜைகளிடமிருந்தும் எதிர்பார்ப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய மேலும் கோரியுள்ளார்.